சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியை சேர்ந்தவர் சுப்பு (வயது 45) கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்குவதற்காக வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தார்.
நீண்ட நாட்களாகியும் சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ஜீவாவிடம் சென்று கேட்ட பொழுது வருமான சான்றிதழுக்கு ஒப்புதல் வழங்க வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர்ருக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச காவல்துறையினர் சுப்புவிடம் ரசாயன பொடி தடவி அடையாளமிடப்பட்ட பணத்தை கொடுத்தனர்.
அந்த பணத்தை சுப்பு சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த ஜீவாவிடம் கொடுத்துள்ளார் அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஜீவாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து 2 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர்.















