திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் செயலிகள் மூலம் பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. அதில் Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை, ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இச்செயலி மூலம் முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு , பழக்கத்தினை ஏற்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி , ஓரின சேர்க்கைக்காக தனிமையில் அழைத்து சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர். இது தொடர்பாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் மூலம் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்