திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (68). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமியின் தாய் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து (15.09.2025) அன்று தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா உள்ளிட்ட காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்