ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான திங்களன்று (நேற்று) பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் வில்லைகள் வழங்கிட அரசு உத்தரவிட்டிருந்தது. மாநிலம் முழுவதிலும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு தொடர்பான கணக்கு வழக்குகளை பார்த்து விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத சுமார் 1.05லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















